ஜனாதிபதி ரணிலை கடுமையாக விமர்சித்த அனந்தி
மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு ஒரு சர்வதேச உடன்படிக்கையைச் செய்ய முடியும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இலங்கை - இந்தியா தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்கள் எடுக்கவுள்ள நிலையில், இன்றையதினம் (14.07.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாங்கள் பல ஒப்பந்தங்களைப் பார்த்திருக்கின்றோம்.
ஊழலற்ற ஆட்சி ஒன்று வேண்டும்
அவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருந்தும் கூட அந்த ஒப்பந்தங்களைத் தூக்கி எறிந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தைச் செய்யவிருப்பதை மிகவும் விசனத்துக்குரிய ஒரு விடயமாகத்தான் பார்க்க முடியும்.
ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளுக்கு எதிராகத் தான் செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.
ஆனால், இன்றைக்கு அந்த விடயம் நடைபெறாமல் அதே ஆட்சியாளர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், மக்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு ஊழலற்ற ஆட்சி ஒன்று வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு அரசு முற்பட வேண்டும்.
இழக்கக் கூடிய அளவு மருந்து
அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதே அமைச்சர்கள் இருக்கின்ற வேளையிலே எவ்வாறு ஒரு ஊழலற்ற ஆட்சியை நடத்த முடியும்? இன்றைக்கு இலங்கையில் மயக்க மருந்து பிரச்சினையால் பலர் உயிரிழந்துள்ளார்கள்.
வேறு இடங்களில் கண் பார்வையை இழக்கக் கூடிய அளவு மருந்து பாவிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான பல செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கின்ற அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது மக்களது கோரிக்கை.
காலத்தின் கட்டாயம்
இன்று மக்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இவ்வாறான மரணங்கள், இழப்புக்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது.
எனவே அதற்கான பொறுப்பு கூறவேண்டிய அமைச்சர்கள் உடனடியாக தங்களது பதவியை விட்டு விலகி புதிய ஒரு தேர்தலை நோக்கி நகர்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |