இஷாரா விசாரணையில் சிக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளி - யாழில் சிக்கிய நபர்
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மைக்ரோ வகை துப்பாக்கி
கிளிநொச்சியில் உள்ள இந்த சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது.
திஹாரிய, ஒகொடபொலவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக இருவரும் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பிரதான குற்றவாளிகள்
இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் உதவி செய்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.



