பாதாள குழுக்களின் பெரும் திட்டம்.. வெளிப்படுத்திய அமைச்சர்!
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள், தங்களுக்கு சார்பான ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்காக திட்டமிட்டமை அவர்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23.10.2025) போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பெசிய அவர்,
“நாங்கள் ஆட்சிக்கு வரும் போதே பாதாள குழுக்களுக்கு இடமில்லையென அவர்கள் தெரிந்தே வைத்துள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு தைரியம் வழங்கி போசித்தவர்கள் கடந்த கால அரசியவாதிகள்.
போதைப்பொருள் விநியோக வலையமைப்பு
இவர்கள் தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பாதாள குழுக்களை வளர்த்தனர். அவ்வாறான ஒரு நிலைமைக்கு நாம் இன்று இடமளிக்க மாட்டோம்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் விபரங்களை நான் நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்துவேன்.
விசேடமாக போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முடிந்தளவு கட்டுப்படுத்தியுள்ளோம். அதனாலேயே பெரும் தொகை போதை பொருட்களை கைப்பற்ற முடிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



