ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றச்செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலக செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன.
அரசியல்வாதிகளால் வளர்ச்சி
இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பணம் இதற்காக பயன்படுத்தப்பட்டது.
சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்கு பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த பின்னணியை புரிந்து கொண்டு தற்போது படிப்படியாக அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன.

நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாங்கள் இந்த கொலைகளை அங்கீகரிக்கவில்லை, அவற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை 'சிவப்பு அறிவித்தல்' மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |