தமிழரசுக்கட்சியின் தலைமைக்காக போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த மடல்
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த கடிதம் எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கை
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் போட்டியில் குதித்துள்ள மதிப்பிற்கும் அன்புக்கு உரிய மூவருக்கும் அன்புடனும் நட்பார்ந்த உரிமையுடனும் நெருக்கடிமிகு தருணத்தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும் எண்ணி இந்த திறந்த கடிதத்தை வரைகின்றேன்.
இதனை ஒரு ஆலோசனையாகவும் வேண்டுகோளாகவும் தேசமக்கள் மனநிலையாகவும் நீங்கள் கொள்வீர்கள் என நானும் என்னையொத்த கருத்துடையவர்களும் முழுமையாக நம்புகின்றோம்.
ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட்டு தொடங்கியது தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.
இலங்கையின் அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும் அர்ப்பணிப்பதற்காக இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கமைய ஒரு தேர்தல் கட்சியாகவும் பதிந்துகொண்ட தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத்திற்கு காலம் முன்னெடுத்து அதனூடாக பல சாதகமான விளைவுகளை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது.
இங்கு நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ்மக்களின் போராட்டங்களை வீரியம் மிக்கதாக மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச முனையவில்லை.
ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஜனநாயக பண்புகளும் அறிவும் புலமையும் மக்கள் மீதான பற்றும் கொண்ட தலைமைத்துவங்களால் தமிழரசுக்கட்சி ஆற்றிய பங்கும் தொடர்ச்சியும் இருப்பும் என்றும் முதன்மையானதாக அமைகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின் தமிழரசுக்கட்சி தனக்குரிய தலைமைத்துவத்தினை தேடுவதும் அதனை தொலைநோக்குடன் கையாளுவதும் மிகவும் முக்கியமாக உள்ளது.
இதனை வெறுமனே ஒரு அரசியற் கட்சியின் உள்ளகப் பிரச்சனையாகவோ தாயகத்திலும் புலத்திலும் வாழும் சுமார் இருபத்தைந்து இலட்சம் மக்களில் வெறுமனே ஒரு நான்காயிரம் பேரினை அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல் குழுவினரின் தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விடுதலையிலும் பொருண்மிய மேம்பாட்டிலும் பண்பாட்டுச்செழுமையிலும் இச்சமூகத்தை பூகோளத்தின் முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத்த பேரவாக்கொண்ட எவரும் ஒதுங்கி நின்றுவிடமுடியாது என்பது எனது உறுதியான கருத்து.
எனினும் இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும் விமர்சிப்பதற்குரிய தருணமாக இதனை மாற்றுவது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.
தற்போது உங்கள் மூவருக்கிடையில் உக்கிரமடைந்துள்ள போட்டியும் அதன்காரணங்களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார முயற்சிகளும் கருத்துப்பரவல்களும் மிகவும் ஆபத்தான கீழ்நிலை நோக்கி கட்சியினை இழுத்துச் செல்வதனை தெளிவாக என்னால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இது உங்களுடைய தலைமைத்துவத்தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின் அங்கத்தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும் கூர்மையான முரண்பாடுகளையும் உருவாக்கி வருகின்றது என்பதனை நீங்களும் கூட முழுமையாக அறிவீர்கள்.
ஆக்கபூர்வமான முயற்சி
அத்துடன் இத்தகைய நிலைமையில் கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் ஏதுமற்ற இலத்திரனியல் சமூக ஊடகங்களில் நிரம்பியுள்ள வக்கிரமான சிந்தனைகொண்டவர்களுக்கும் ஈழத்தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும் உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம் 'வெறும் வாய்க்கு அவலாக' மாறியுள்ளது. இவற்றினால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈழத்தமிழ் சமூகம் தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத்திலும் புலத்திலும் இந்த நெருக்கடியை மிகவும் சாதுரியமாக கடந்து செல்லவேண்டியுள்ளது.
அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கடந்து செல்லப் போகின்றார்கள் என்பதனை எம்மவர்கள் மட்டுமல்ல எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகமும் எம்மைப் பலவீனப்படுத்தி அழிக்கநினைக்கும் சக்திகளும் துல்லியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலைமையில் தான் நான் ஒரு திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து பின்வரும் விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன்.
நான் இக்கடிதத்தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும்போது இருக்கக்கூடிய ஒழுங்கும் கூட சிலவேளையில் தவறான ஊகத்திற்கு வித்திடலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே போட்டியிடும் மூவர் என உங்களை விளித்துள்ளேன்.
1. இந்த வருடத்திலும் (2024) அடுத்த வருடம் 2025 இலும் கூட சிறீலங்காவின் அரசியலில் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு தீர்வுதரக்கூடிய எந்தவொரு அரசியல் முனைப்பும் உருவாகப்போவதில்லை என்பது கண்கூடு.
2. இத்தகைய தேக்கநிலை அடுத்த ஒரு தசாப்தத்திற்காவது நிச்சயமாக தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அவதானிப்புகள் தொடர்ச்சியாக பதிவுசெய்து வருகின்றன. அவர்களது கவனம் முழுவதும் சிறீலங்காவினை பொருளாதர நெருக்கடிக்குள்ளிருந்து மீட்பது தொடர்டபாகவே அமைந்துள்ளது.
3. இந்தியாவும் கூட புதிதாக எழுந்துள்ள மாலைதீவு - சீன கூட்டுறவின் தாக்கமும் படிப்பினைகளினதும் காரணமாக சிறீலங்காவினையும் மிகவும் அவதானமாக கையாளும் மென்போக்கு இராசதந்திர முயற்சிகளில் தான் தன் கவனத்தை செலுத்தும். அத்துடன் இவ்வாண்டு (2024) இந்தியாவின் தேசிய அரசியளுக்கான தேர்தல் ஆண்டாகவும் உள்ளது.
4. இத்தகைய தேக்க நிலை சிறீலங்காவிலும் இந்தியாவிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்தாலும் தமிழின அழிப்புக்கான கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் எவ்வித தளர்வுமில்லாமல் மறைகரங்களாக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக இயங்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளினால் விரைவுபட்டதாக தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
5. மேற்கூறிய நிலைமையில் 2024 - 2025 ஆண்டுகள் ஈழத்தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானமாக இருக்கின்றது. அரசியல் வேட்கைகளை மாற்றங்களின் நியதிகளுக்கு இசைவாக மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தி தேசநிர்மாணத்தை முன்னெடுக்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக எம்மக்களை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது காலத்தின் தேவையாக உள்ளது.
6. இந்தச் சூழ்நிலையில் தமிழரின் விடுதலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை சனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாக தொடரும் தமிழரசுக் கடசியினை சிதைக்கும் முயற்சிகளும் உள்ளக முரண்பாடுகளும் தொடர் தேக்கநிலையும் அனுமதிக்கப்பட முடியாதது.
திறந்த வேண்டுகோள்
இந்த காரணங்களால் தங்கள் மூவரிடமும் ஒரு திறந்த வேண்டுகோளினை சமர்ப்பிக்கின்றேன்.
அ) தற்போது தமிழரசுக்கட்சியும் தமிழ்மக்களும் அனுபவிக்கும் கட்சியின் தலைமைத்துவ தேக்கநிலை உடனடியாக உடைக்கப்படவேண்டும். அதனைத் தொடரவோ அல்லது அதன் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக செயற்படவோ அனுமதிக்ககூடாது.
ஆ) தவிர்க்க முடியாமல் தமிழரசுக்கட்சியின் யாப்பின்படி புதிய தலைவர் தெரிவுக்கான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இடைநிறுத்துவதோ அல்லது மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவது என்ற பெயரில் தற்போதைய தலைமை தொடர வாய்ப்பளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இ) அதேவேளையில் தலைமைப்பதவிக்கான போட்டியில் வெல்வதற்காக கட்சியின் பெறுமதியான அங்கத்தவர்கள் தங்களுக்குள் சேறுவாருவதும் ஆதரவாளர்கள் குழுநிலையாக பிரிவதும் சகிக்கப்படமுடியாத விடயங்கள்.
ஈ) உங்கள் தேர்தல் போட்டியின் முடிவுகளின் பின் ஒருவரின் கையோக்குவதாகவோ மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ ஒதுக்கப்படுவதாகவோ நிலைமைகள் காணப்படாது என்று போட்டியாளர்களாகிய நீங்கள் வாக்குறுதியளித்தாலும் ஊமைக்காயங்கள் ஆழமானதாகவும் பின் விளைவுகள் கட்சியின் வாக்கு வங்கியிலும் தமிழரசுக்கட்சியின் எதிர்கால பங்களிப்பிலும் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளி பாரியதாக மாற்றமடையும் என்பதனையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.
இத்தகைய நிலைமையில் உங்களுக்குள்ள தெரிவுகளில் ஒன்று யாதெனில் நீங்கள் மூவரும் ஒரு கனவான் உடன்பாட்டிற்கு வருவதுதான் மிகப்பொருத்தமானது. அந்த உடன்பாட்டின்படி பின்வரும் விடயங்களை செய்யலாம்.
1. தற்போதைய நிலையில் தமிழரசுக்கட்சியை மீள் கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டியுள்ளது. கடசியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையினை திட்டமிட்டு அதிகரித்து பலம்பெறச் செய்யவும் கிளைகளைப் புனரமைத்ததில் கடந்த காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அவசியமும் கால அவகாசமும் தேவையாக உள்ளது. தற்போதுள்ள தலைமைத்துவத்தின் கீழ் அது சாத்தியமில்லை என்பது வெளிப்படை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு வருடம்) தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கட்சியை முழுமையாக கட்டமைக்கவேண்டும்.
2. தேர்தலில் கூர்மையடைந்துள்ள போட்டி இருமுனைப் போட்டியாக வெளிப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் போட்டி நிலையிலிருந்து பின்னிறங்கி கிழக்கு மாகாண போட்டியாளரை தலைவராக வாக்களிக்கும்படி உங்கள் ஆதரவாளர்களை கோருவதன் ஊடாக தற்காலிக தலைவராக யோகேசுவரன் தெரிவுசெய்யப்படுவதனை உறுதிசெய்து கட்சியின் ஏனைய போறுப்பான பதவிகளான செயலாளர், சர்வதேச தொடர்பாளர் ஆகிய பொறுப்புக்களை நீங்கள் இருவரும் பொறுப்பேற்பதன் மூலம் கட்சியை இணைந்து பலப்படுத்தலாம்.
3. நீங்கள் இருவரும் கூர்வாட்களாக தொடர்ந்து இருந்தால் கட்சி என்னும் ஒரு உறையுள் இரண்டு வாட்களையும் வைத்திருக்கமுடியாது. ஆனால் இரண்டு கம்பீரமான குதிரைகளாக நீங்கள் கட்சியையும் தமிழர்தேசத்தின் செல்நெறியையும் முன்நோக்கி விரைந்து இழுத்துச்செல்லலாம்.
4. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 14வருடங்கள் கடந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்களும் தடுமாற்றங்களும் நிறைந்த இச் சூழ்நிலையில் உங்கள் இருவரினதும் ஆளுமையினையும் ஆற்றல்களையும் செயலாற்றல் திறன்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது தமிழினம் இழந்து போவதோ மிகவும் பாரதூரமானது. அவ் இடைவெளியை நிரப்புவதும் குறுங்காலத்தில் சாத்தியமற்றது.
5. குறித்த ஒரு வருடத்தினுள் தமிழரசுக்கட்சி தன்னை முழுமையாக சீரமைத்து வலுப்படுத்தியபின்பு உங்களுக்குரிய பொறுப்புக்களை பரஸ்பரம் தீர்மானித்து தலைமைத்துவத்தினை கூட்டுப்பொறுப்புக்களுடன் தொடரமுடியும்.
இந்த வேண்டுகோளும் ஆலோசனையும் காலத்தின் தேவை கருதியும் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் கருதியும் தங்களிடம் முன்வைக்கப்படுகின்றது என்பதனை அன்புடனும் நட்புடனும் உரிமையுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன் ”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |