அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதை போக்குவரத்தின் தற்போதைய நிலை: மக்கள் கோரிக்கை
மட்டக்களப்பு, அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையை உடன் சீரமைக்க முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பிரயாணிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்திற்கும், எழுவாங்கரைப் பிரதேசத்திற்கும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதை பிரதான நீர் வழிப் போக்குவரத்து மார்க்கமாக விளங்குகிறது.
சேதமடைந்த படகுப்பாதை
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் படகுப்பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்தை நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் இந்த படகுப்பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமலேயே பிரயாணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த படகுப்பாதையின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலிகள் துருப்பிடித்த நிலையில் வெடித்து காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பாதையில் இருபக்க தட்டிகளும் பழுதடைந்த நிலையில் அதற்கு மரத்தடிகளால் தற்காலிகமாக பொருத்தப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் பயணம் செய்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சில வருடங்களுக்கு முன்னர் கின்னியா, குறிஞ்சாங்கேனி படகுப் பாதை விபத்துக்குள்ளானது போன்று இந்தபடகுப்பதைக்கும் ஏற்படாத்திருக்க உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |