அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்மமான மரணம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது.
விசாரணை குழு
நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் உள்ளிட்ட இதர தரப்பினரால் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த மத்ரஸா தொடர்பில் அக்குழு துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணையை முன்னெடுக்கும் குழுவில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அதிகாரி மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 04 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினையும் அக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
மாணவனின் மரணம்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டதுடன் மன்றின் உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.