தீர்வின்றேல் போராட்டம் ஆரம்பிக்கும்: அம்பாறை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கம் (Photos)
கடவுச்சீட்டு சேவர் டவுண் செய்யப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அம்பாறை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் தீர்வின்றேல் போராட்டம் ஆரம்பிக்கும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாறை மாவட்ட சங்கம் தனியார் விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண மற்றும் அம்பாறை மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ஆர்.பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,
அரச அங்கீகாரத்துடன் கடவுச்சீட்டு புகைப்படம் எடுக்கும் உரிமையாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் கடவுச்சீட்டு வழங்கும் பொருட்டு புகைப்படம் எடுத்து ஒன்லைன் மூலமாக கடவுச்சீட்டு திணைக்களத்திற்கு அனுப்பும் சேவர் கடந்த சில மாதங்களாக டவுண் செய்யப்படுகின்றது.
தொழில் பாதிப்படைவதால் போராட்டம்
புகைப்படம் எடுக்கப்பட்டு 7 நிமிடங்களுக்குள் அப்படத்தை அப்லோட் செய்யவேண்டும். இல்லையேல் மீண்டும் புகைப்படம் எடுக்கவேண்டும். இந்நிலையில் சேவர் நினைத்ததுபோல் டவுண் செய்யப்படுகின்றது.
இதனால் புகைப்படம் மீண்டும் எடுக்கவேண்டிய நிலை உருவாவதுடன், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்த நிலை நீடித்தால் நாங்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். இது தொடர்பில் மூன்று தடவைகள் அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கத்தினூடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கடிதங்கள் அனுப்பியபோதும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
தீர்வுக்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதன் காரணமாக ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் பிரதமர் தலையீடு செய்து தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு பின்னரும் தீர்வு வழங்காவிடின் எதிர்வரும் 15ஆம் திகதி தேசிய ரீதியில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் வி.ஆர்.மகேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய அடையாள அட்டைக்காக வழங்கப்பட்ட மென்பொருள் இதுவரையில் சரியாக இயங்குகின்றது. ஆனால் தற்போது கடவுச்சீட்டு மென்பொருள் இயங்கும் சேவர் டவுண் செய்யப்படுகின்றது.
இதனால் நாம் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது வெளிநாடு செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனாலும் எங்களால் அவர்களுக்கான சேவையை வழங்க முடியாமல் உள்ளது.
வெளிநாடு செல்வதால் இரு நன்மைகள் கிடைக்கின்றன. நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவதுடன் குறித்த குடும்பமும் வாழ்கின்றது.
இவ்வாறான நிலையில் சேவர் டவுண் செய்யப்படுவது நியாயமற்றது. இதற்கு தீர்வை பிரதமர் மிகவிரைவில் வழங்க வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டமும் ஆரம்பிக்கப்படும் என கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமதி பெற்ற 37 ஸ்ரூடியோ உரிமையாளர்களும்
கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.



