அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை மறுதவணையிட்டு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது .
வழக்கின் இறுதி அறிக்கை
இந்த வழக்கானது புதன்கிழமை(21) கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திறந்த மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பெரிய நீலாவணை பொலிஸார் சமர்ப்பணங்களை மேற்கொண்டு இவ் வழக்கில் சந்தேக நபரது வாக்கு மூலத்தை இன்னும் பெறவில்லை எனவும் பொலிஸ் சட்டப் பிரிவிற்கு அனுப்பிய கோவைக்கான ஆலோசனை கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும் அது கிடைக்கப் பெற்றவுடன் மன்றுக்கு அறிக்கையிட வேறு தினம் ஒன்றினை வழங்குமாறும் கோரி இருந்தனர்.

மேற்படி சமர்பணத்திற்கு தனது ஆட்சேபனையைப் பதிவு செய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களை மேற்கொண்டு குறித்த இவ்வழக்கிலே சந்தேக நபரின் வாக்கு மூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த தவணையில் மன்றினால் தெளிவான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வழக்குத் தொடுனரான பெரியநீலாவணைப் பொலிஸார் தொடர்ந்தும் இவ்வழக்கை தாமதப்படுத்தும் நோக்கோடு மீண்டும் மீண்டும் தினம் கோரிவருவதாகவும் குறித்த இவ்வழக்கில் நீதியைக் கண்டடையும் பொருட்டு சந்தேக நபரின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறும் மன்றைக் கோரி இருந்தார்.
இருபக்க சமர்ப்பணங்களையும் கேட்டறிந்த மன்றானது சந்தேக நபரது வாக்குமூலத்தைப் பெற்று வழக்கின் இறுதி அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையாக்கியது.
இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam