முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு விசாரணைகளில் நெருக்கடி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் கொலை வழக்கு விசாரணைகளில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதியளவு இரசாயன பொருட்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
மரபணு பரிசோதனைக்கான இரசாயன வகைகளில் தட்டுப்பாடு
குறிப்பாக சந்தேகநபர்களிடம் மரபணு பரிசோதனை நடத்த இந்த இரசாயன வகைகள் தேவை எனவும், அதற்கான தட்டுப்பாடு வழக்கு விசாரணைகளை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் அத்தனகல்ல நீதிமன்றில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய 42 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.