இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்! அமெரிக்காவின் முக்கியஸ்தர் சமந்தா பவர்
அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தலைமை அதிகாரி சமந்தா பவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சமந்தா பவர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 40 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் அறிவித்திருந்தார்.
இதன்போது அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நீண்ட காலம் கடந்திருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் இன்னமும் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை.
இலங்கை தொடர்பில் கண்காணிப்பு பொறிமுறை
இலங்கை தொடர்பில் கண்காணிப்பு பொறிமுறை நீதியைப் பெற்றுக்கொள்வதும் காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுமே பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இன்னமும் தாய்மார் காணாமல்போன தமது பிள்ளையின் புகைப்படத்துடன் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஓர் உறுப்பினராக விளங்குவதுடன் மேற்படி கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே அவர் மீண்டும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவருடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் உதவி நிர்வாக அதிகாரி அஞ்சலி கௌரும் வருகை தருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.