சர்ச்சையை ஏற்படுத்திய இனவாத பேச்சு: தமிழர்களை வைத்து பதில் கூறும் அம்பிட்டிய தேரர்(Video)
மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயாரின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த இடத்திற்குச் சென்ற தேரர், தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களை துண்டு துண்டாக சிங்களவர்கள் வெட்டுவார்கள் என பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், அவரது இந்த கருத்துக்கள் தமிழ் சமூகத்தினரின் மத்தியில் தற்போது சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பிட்டிய தேரரின் இந்த இனவாத பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் முறைப்பாடு செய்துள்ளதுடன் தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழர்களைக் கொண்டு பதில் வழங்கும் தேரர்
இவ்வாறான நிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் முகப்புத்தக பதிவில், தமிழ் மொழி பேசும் சிலர் தேரருக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவது போன்ற காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.
இதில் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய தேரர் கூறிய கருத்து நியாயப்படுத்தப்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.
தமிழர்களுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை தமிழர்களை வைத்தே நியாயப்படுத்தும் விதமாகவும், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு தமிழர்களை கொண்டு பதில் வழங்கும் வகையிலும் அவரது காணொளிப் பதிவு அமைகின்றது.