வடக்கு - கிழக்கு ஆயர்களுடன் சுவிஸ்லாந்தின் தூதுவர் சந்திப்பு!
வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று நண்பகல் உலங்கு வானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவிவரும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது ஆயர்கள் இங்கு நிலவிவரும் தற்போதைய நெருக்கடி நிலமைகளை எடுத்துக்கூறி, வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகளில் அரசு அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதையும், இப்பிரதேசங்களில் இந்திய அரசு முன்னெடுக்க முனையும் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அபிவிருத்திப்பணிகளை தென்பகுதியில் முன்னெடுக்க முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசு முன்னெடுத்து வரும் சிங்களமயமாக்கல் செயற்திட்டங்களை விபரித்ததோடு மக்கள் இலங்கை அரசின் மீது கொண்டுள்ள அதிருப்தியையும் சுட்டிக்காட்டினர்.




