யாழ். பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய பரீட்சைத் தேவைப்பாடுகளுக்காக விடுதிகளில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட பயணத் தடை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்மைகயில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் எழுந்துள்ள பெருந்தொற்று அபாயம் மிக்க காலப்பகுதியிலும், இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சைத் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்காக சுகாதாரப் பகுதியினரால் அறிவிக்கப்பட்டபடி சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மாணவர்களின் சுய விருப்பின் பேரில் விடுதிகளில் வெளித் தொடர்புகள் இன்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் இன்று நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை காரணமாகவும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களும் வீடுகளுக்குத் திரும்பும் வகையில் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள் விடுதிகளில் தங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தைச் சீராகச் மேற்கொள்வதற்கும் மாணவர் நலச் சேவைகள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
அதன் படி, மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள யாழ். நகர மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியுள்ள சுமார் 150 மாணவர்களுக்கும், கிளிநொச்சி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 175 மாணவர்களுக்கும் , மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கழக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 65 மாணவர்களுக்கும் அந்தந்த விடுதிகளின் உணவகங்கள் ஊடாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கோண்டாவில், கொக்குவில் மற்றும் ஆனந்தக்குமாரசுவாமி மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள சட்டத்துறை, இணை மருத்துவ விஞ்ஞான பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 69 மாணவர்களுக்கு வெளியில் இருந்து விடுதிக்கு உணவு விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதேநேரம், அடுத்துவரும் நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ள பயணத் தடை தளர்த்தப்பட்டதும், மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பரீட்சைச் செயற்பாடுகளின் தேவைக்கேற்பவும் அவர்கள் தத்தமது இடங்களுக்குச் செல்வதற்கான
ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
