30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும்! இம்ரான் மகரூப் எம்.பி கோரிக்கை
திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுமார் 450 குடும்பங்களுக்குச் சொந்தமான வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அவர்கள் விவசாயம் செய்து வரும் காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றை தினம் (15.10.2026) மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.எம்.ஹேமந்த குமாரவின் நெறிப்படுத்தலில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவின் தலைமையில் நடைபெற்றது.
மக்களின் பிரச்சினை
இதன்போது, ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் நீண்டகாலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினையை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டினார்.
குறித்த பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் காணியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுமார் 450 குடும்பங்கள், தற்போது வனபரிபாலன திணைக்களத்தினரின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீண்டகாலமாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மக்களைத் திடீரென விவசாயத்தை நிறுத்துமாறும், இனிமேல் குறித்த காணிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்றும் வனபரிபாலன திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை
இதனால், பல ஆண்டுகளாக விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, குறித்த குடும்பங்கள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்து வரும் காணிகளை உரிய முறையில் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்தார்.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.