எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள அமெரிக்காவின் பிரபல பத்திரிகை
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்(Elon Musk) மீது பெண் மீது தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் பயிற்சி பணியாளரிடம் மஸ்க் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பின்னர் அவரை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
மேலும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சங்கடமாக உணர வேண்டிய சூழலை எலான் மஸ்க் உருவாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதை தரும் மருந்துகள்
இது எலான் மஸ்க் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, அவர் கோகைன், எக்ஸ்டசி போன்ற போதை தரும் மருந்துகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும், சில சமயங்களில் நிறுவன அதிகாரிகளுடன் சேர்ந்து அலுவலகத்திலேயே இது போன்ற மருந்துகளை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அத்துடன் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக சம்பளம் வழங்கியதாகவும், முறைப்பாடு செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 11 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் , உலகில் மக்கள் தொகை குறைவது பெரும் பிரச்சினை என்றும், அதிக நுண்ணறிவு உள்ளவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் மஸ்க்-இன் சட்டத்தரணிகள், வெளியான அறிக்கையை மறுத்துள்ளனர். வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையில் பொய்யான தகவல்கள், தவறான சித்தரிப்புகள் மற்றும் உண்மைக்கு மாறான விடயங்கள் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |