யாழ். வடமராட்சி கடற்றொழிலாளர் சங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே நிர்வாகத் தெரிவில் பொதுச்சபை பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களிலும் பொதுச்சபைக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அனைவரும் தமது சமாசங்களிற்கு நிர்வாகம் தெரிவு செய்யப்படும்போது வாக்களிக்க கோரும் சந்தர்ப்பங்களில் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களும் வாக்களித்தே நிர்வாகம் தெரிவு செய்யப்படுவது வழமை.
வாக்களிக்கும் நடைமுறை
எனினும், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டும் சமாசத்திற்கு தெரிவு செய்யப்பட்ட. பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து வாக்களிக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்கும் நடைமுறை உள்ளதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த நிலைமை மாற்றப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |