சம்பந்தனின் முதுமையை காட்டி தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன்: ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (29.10.2023) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த ஶ்ரீரங்கேஸ்வரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் உள்விவகாரங்கள்
சம்பந்தன் வயோதிபம் காரணமாகவோ நாடாளுமன்ற உறுப்பினரக்கான பணியை மேற்கொள்ள முடியாதவராகவோ இருப்பாராயின் அவரை விடுவித்து புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதென்பது அந்த கட்சியின் உள்விவகாரம்.
ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் அரசியல் கொள்கை நிலை, கட்சி யாப்பு விதிமுறை, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என பல்வோறு அம்சங்களை உள்ளடக்கியே இருக்கும்.
அந்தவகையில் அந்தக்கட்சியின் உள்விவகாரங்களை கட்சிக்குள்ளேயே பேசி ஒரு தீர்மானத்தை பெற்று அல்லது ஒரு இணக்கப்பாட்டை பெற்று அங்கேயே அக்கட்சியின் தலைமை பொறுப்பு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மாற்றம் தொடர்பாக முடிவை பேசிக்கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு.
அதை விடுத்து கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிக்கொண்டுவருவது என்ன நோக்கத்தின் அடிப்படையில் என்பது தெளிவாக புலப்படுகின்றது.
மாகாண சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியாளர்கள் பொலிஸ் அதிகாரங்களை தற்போது கோருவது தமது அரசியல் நோக்கத்துக்காகவே அன்றி மாகாண அதிகாரங்களை வலுப்படுத்தவதற்காக அல்ல.
பேரம்பேசும் பலம்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை மாவட்டத்தின் பொலிஸாரால் சரிவர மேற்கொள்ள முடியாதிருக்குமானால் அந்த பொறுப்பை எமக்கு அதாவது வடக்கு மாகாணசபைக்கு தாருங்கள், அதை நிர்வகித்துக் காட்டுகின்றோம் என கோரியிருந்தார்.
சிறீதரனின் இத்தகைய கூற்று ஒரு நகைப்புக்குரியதாகவே பார்க்க முடிகின்றது. ஏனெனில் வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை அதுவும் மிகப்பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் தான் இன்று இவ்வாறு கோரும் கூட்டமைப்பினர்.
சாதாரணமாக நடைமுறைப்படுத்தக்கூடிய அதுவும் சட்ட ஒழுங்கு என்ற ஒன்றையும் உள்ளடக்கிய 37 அதிகாரங்களை கொண்டிருந்தும் அதனை இந்த கூட்டமைப்பினர் நடைமுறைப்படுத்தவில்லை.
அத்துடன் அன்று இந்த அதிகாரங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கக் கூடிய பேரம்பேசும் பலம் இருந்தும் அவர்கள் அதனை விரும்பியிருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
மைத்திரியின் நல்லாட்சி அரசில் கொள்கை வகுப்பாளர்களாகவும் உத்தியோகப்பற்றற்ற மைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்களை கொண்டவர்களாகவும் இவர்கள் வலம்வந்தனர்.

சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
ஐந்து வருடங்களை வீணடித்தத கூட்டமைப்பு
தமிழ் மக்களின் நலன் அல்லது அரசியல் உரிமை பற்றி அக்கறை இருப்பின் அன்றே அன்றைய மைத்திரி அரசாங்கத்துடன் பேரம்பேசி நிபந்தனைகளை விதித்தாவது மாகாணத்துக்கு உரிய அதிகாரங்களை பெற்றிருக்க முடியும்.
ஏனெனில் இவர்களுடைய ஆதரவில்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியாத நிலையில் மைத்திரி அரசு தங்கியிருந்தது.
அவ்வாறான சூழலில் மைத்திரி அரசுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட்ட பல்வேறு விடயங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்க முடியும்.
அதைவிடுத்து அன்று மௌனமாக இருந்துவிட்டு இன்று இவ்வாறு கோருவது மக்கள் நலன்சார்ந்தது அல்ல.
அது ஒரு தன்னிலை விளம்பரமாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய ஆசனங்களுக்கு மேலதிகமாகவே தனது பங்களிப்பை ஆட்சியாளர்களுக்கு வழங்கி மக்கள் நலன்சார் தேவைகளை மேற்கொண்டு வந்துகொண்டிருக்கின்றது.
தென்னிலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட வினைத்திறனற்ற ஓய்வூதியர் ஒருவரை முதலமைச்சராக்கிவிட்டு ஐந்து வருடங்களை வீணடித்ததே கூட்டமைப்பின் சாதனை என கருதலாம். அந்தவகையில் கூட்மைப்புக்கு ஆற்றலும் ஆளுமை இருந்திருந்தால் இன்று ஶ்ரீதரன் கோருவதை அன்றே செய்திருக்கலாம் ஆனால் இன்று பேசுவது தேர்தல் அரசியலுக்காக மட்டுமே.” எனவும் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்திருந்தார்.




