அதிருப்தியளிக்கும் முல்லைத்தீவு - துணுக்காய் பாடசாலை அதிபரின் செயற்பாடு
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் சமூகச் செயற்பாட்டாளர்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்டுகின்றன.
நீண்ட காலமாக பாடசாலையில் எத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாததோடு பாடசாலைக்கென கிடைக்கும் நிதிகள் தொடர்பில் உரிய கணக்கறிக்கைகள் எவையும் பெற்றோர் பார்வைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என கூறப்படுகின்றன.
இந்நிலையில், உரிய முறையான விசாரணைகளை கோரி அதன் வழி நல்ல மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வலயக்கல்விப் பணிமனையினாலும் பாடசாலை நிர்வாகத்தினாலும் மறுக்கப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை அதிபரின் செயற்பாடு
பல பாடசாலைகளில் நிதியாது சரியான முறையில் முகாமை செய்யப்படுவதில்லை எனவும் அங்கு நிதிமோசடிகள் நடைபெறுவதாகவும் அவை உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படுவதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒன்பது வருடங்களாக அதிபராக கடமையாற்றிவரும் தற்போதைய அதிபர் மீது குறித்த பிரதேசத்திற்கான சமூக செயற்பாட்டாளர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அதிகளவில் மதுபானங்களை பாவிப்பவராகவும் வலயத்தில் இருந்து பாடசாலைக்கு வருகின்ற மேற்பார்வை அதிகாரிகள் இவரது நண்பர் வட்டத்தில் இருப்பதால் தவறுகளை மூடிமறைத்து விடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
“பாடசாலையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை எனவும், பாடசாலைக்கு கிடைக்கும் நிதிகளை வீணடிப்பதாகவும், பாடசாலை மாணவர்களிடமிருந்து நிதி பெறுகதாகவும், அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறாக செயற்பாடுகளை நீண்ட காலமாக அவதானித்ததோடு அதனை பல தடவை சுட்டிக்காட்டிய போதும் மாற்றங்கள் எவையும் ஏற்படாது, மாறாக தாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்களுடனான உரையாடலில் அறியகிடைத்துள்ளது.
அதிகளவில் மதுபானங்களை பாவித்து வரும் பாடசாலை அதிபர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் மக்களிடையே மேற்கொண்ட தேடலின் போது “குடிக்காது விட்டால் அவருக்கு கைகால்கள் நடுங்கும்” என பலர் கருத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான உணவு வழங்கல்
பாடசாலை அதிபர் கிராம மக்களுடன் நல்லுறவை பேணிக் கொள்வதால் அவரது செயற்பாடுகள் தொடர்பில் யாரும் குறை சொல்வதில்லை என அவ்வூர் வாசியொருவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டிய அதிபரே தவறான நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.
மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கல் தொடர்பிலும் உரிய முறையில் உணவுகள் வழங்கப்படாத போதும் நேர்த்தியான கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதாக பாடசாலையின் உள்ளக தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது. எனினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சமையல் செய்வோருக்கான கூலி மாணவர்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் அறிய முடிகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பாடசாலையாக இது இருப்பதும் மாணவர்களுக்கான பாதணி முத்திரைகள் ஏனைய பாடசாலைகளில் வழங்கப்பட்ட போதும் இந்த பாடசாலையில் வழங்கப்படவில்லை.
பாதணி, முத்திரைகளுக்கு பதிலாக அதன் பெறுமதியுள்ள பணத்தினை இந்த வாரத்தில் மாணவர்களுக்கு பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடும் ஆர்வலர்கள் இவ்வளவு நாட்களும் ஏன் பாதணி முத்திரைகள் வழங்கப்படாது இருந்ததாகவும் கேள்வி எழுப்புகின்றனர்.
2023 ஆம் ஆண்டு மார்கழி மாதத்திலேயே ஏனைய பாடசாலைகளில் பாதணி முத்திரைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாய நில குத்தகை
பாடசாலைக்கு உரித்தான விவசாய நிலம் கடந்த நான்கு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்பட்டு குத்தகைப் பணமும் பெறப்பட்டுள்ளது.
குத்தகைக்கு நிலத்தினை ஏலத்தில் விடுவதன் மூலம் விவசாயிகள் அந்த நிலத்தினை தங்கள் விவசாயச் செயற்பாடுகளுக்கு பெற்றுக்கொள்ள முடிகின்றது.
பெறப்படும் குத்தகை பணம் பாடசாலையில் எப்படி பயன்படுத்தப்படுகின்றது என தமக்குத் தெரியாது என மக்களிடையே மேற்கொண்ட தேடல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாடசாலை அபிவித்தியில் ஈடுபாடுடைய ஒருவர் இந்நாள் பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
பாடசாலைகளில் கல்வி கற்று தங்கள் வாழ்வை வளமாக்கும் நோக்குடன் வரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஏமாற்றிவிடுவதாகவே பாடசாலைகளில் நிகழும் விதிமாறிய செயற்பாடுகள் அமைந்துவிடுகின்றன.
பாடசாலைகளுக்கான செயற்பாட்டுக்கோவைகள் முழுமையாக செயல் வடிவம் பெற்றால் ஆரோக்கியமான நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கல்வியதிகாரிகள் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும் என சமூகவிடய ஆய்வாளர் ஒருவரிடம் பாடசாலைகளில் நிகழும் மாணவர் நலன் சாராத செயற்பாடுகள் தொடர்பில் கேட்ட போது அறியமுடிந்தது.
மாற்றம் வேண்டும்
பெற்றோர் , மாணவர், அதிபர், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து இயங்கும் போது பாடசாலை சார்ந்த சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகள் நல்ல விளைவுகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
எனினும் எங்கோ ஒரு இடத்தில் விடப்படும் சிறு தவறும் ஒன்றில் ஒன்று சார்ந்து நாட்கள் கடந்து போகும் போது பெரிய தவறாக வெளிப்படுவதனை சமூகத்தின் நீரோட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.
கிராமியப் பாடசாலைகளில் கல்வி வலயங்களின் கண்காணிப்பு அழுத்தமற்றதாக இருப்பதாக அறியமுடிந்தது.
ஈழத்தமிழரின் நாளைய எதிர்காலம் சிறந்த கல்விமுறை வளர்ச்சியிலேயே தங்கியிருக்கின்றது. பொறுப்பு வாய்ந்த புரிந்துணர்வோடு பாடசாலைகளில் நடைபெற்று வரும் மாணவர் நலன் சாராத விடயங்கள் தவிர்க்கப்பட்டு ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குவதில் உரிய தரப்பினர் கவனமெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |