முல்லைத்தீவில் பிரபல பாடசாலை ஒன்றின் மோசமான நிர்வாக திறன் - பெரும் பாதிப்பில் மாணவர்கள்
முல்லைத்தீவில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் புதிதாக இணைந்த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தனியான வகுப்பறைகளை இதுவரை வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மே 29 அன்று ஆரம்பித்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு 01 டிசம்பர் 2023 இல் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன.
தமக்குரிய பாடத் தெரிவுகளை செய்து கொண்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலையில் இணைந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் வகுப்பறைகள் இதுவரை வழங்கப்படவில்லை.
கணித விஞ்ஞானப் பிரிவுகள்
கணித விஞ்ஞானப் பாடத்துறையில் 9 மாணவர்கள் உள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 4 மாணவர்கள் கற்றலை மேற்கொள்வதோடு கணித பாடப்பிரிவில் 5 மாணவர்களும் கற்றலை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடுதிரை கணிணி வகுப்பறையில் இருந்தவாறு தம் பாடத்துறையில் கற்றலை மேற்கொண்டு வரும் அவர்களுக்கு தனிவகுப்பறை வழங்குவதற்கு பாடசாலையில் வகுப்பறைகள் இல்லையென பாடசாலையால் கூறப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையின் இரண்டு தொடுதிரை வகுப்பறைகளை கொண்டுள்ளதாக மாணவர்களிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.
கலைப் பாட பிரிவுகள் வகுப்பு
கலைப் பாடப் பிரிவில் ஐம்பதுக்கும் மேல் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளதால் இரண்டு பிரிவுகளாக (division) பிரிக்கப்பட்டுள்ளனர். இரு பிரிவுகளும் ஒரு வகுப்பறையில் தங்களின் கற்றலை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது இந்த வகுப்பறைகள் தற்காலிக வகுப்பறைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைந்த வளங்களைக் கொண்ட அந்தப் பாடசாலையின் கட்டட வளங்களை உரிய முறையில் திட்டமிட்டு பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் முன் வைத்து வருகின்றனர்.
நெருக்கடிக்கு காரணம் என்ன?
பாடசாலை நிர்வாகத்தின் வினைத்திறனான பயன்பாட்டுத் திட்டமிடலின்மையே மாணவர்களின் இந்த நெருக்கடிக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
2025இல் பரீட்சை எழுதவுள்ள உயர்தர பிரிவான இவர்களுக்கு வழங்குவதற்கேற்ற வகுப்பறைகள் இருந்த போதும் அவை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக பாடசாலையின் உயர்தர மாணவர்கள் சிலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
உரிய காலங்களில் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெறாமையால் பரீட்சை முடிந்து வெளியேற வேண்டிய வகுப்புக்களுக்கும் பாடசாலைகளில் இடங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதால் இந்த நிலைமை தொடர்பில் அப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் விளக்கியிருந்தார்.
எதிர்வரும் காலங்களில் க.பொ.த (சா/த) மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பரீட்சை முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்காது தொடர்ந்து பாடசாலைக்கு உள்வாங்கப்படுவார்கள் என்ற தகவலும் நெருக்கடியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வலயக் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலை தொடர்பில் அண்மையில் மேற்கொண்டிருந்த மேற்பார்வை நடவடிக்கைகளின் போது தனி வகுப்பறைகள் வழங்கப்படாமை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
2025 இல் பரீட்சை எழுதவுள்ள உயர்தர வகுப்பில் வணிகப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |