கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமாணத்திற்கு நிதியை பெறல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து
கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமாணத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
வவுனியா, சமனங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தர்ல் பௌத்த விகாரை கட்டப்படுவதாக செய்தி வெளியாகியது.
இதனையடுத்து, அங்கு தொல்பொருள் திணைக்களம், ஆலய நிர்வாகம், கிராம அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதானப் பணியை மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன் ஆகியோருடன் இணைந்து பார்வையிட்ட பின ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நாடு. ஆலய பரிபாலன சபைக்கும் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கதிர்காமம் எல்லா மதத்தவர்களும் வழிபடும் தளம். தென் பகுதியில் எல்லோரும் அங்கு சென்று வழிபடுகிறார்கள்.
தொல்லியல் சின்னங்கள்
அதேபோல் மலைநாட்டிலும் பல இந்து மத ஆலயங்களில் எல்லோரும் வழிபடுகிறார்கள். கொழும்பு மாவட்டத்தில் அதிகமான இந்து ஆலயங்கள் உள்ளது. மதம் என்பதை வைத்து சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு அரசியல் தேவைப்படாது. சமயம் என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றுகின்ற ஒரு விடயம்.

இன, மதங்களை கொண்டு செய்யப்பட்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் இவ்வாறான மதவாதம் உருவாக்கப்பெறுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்து மத தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்கிறார்கள்.
இன, மத வாத பிரிவுகளுக்கு உட்படாமல் நாம் இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க விரும்புகின்றோம். நாட்டில் வாழும் எதிர்கால சந்ததிகள் ஒற்றுமையாக வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
அதற்காக அரசாங்கம் எனற வகையில் நாங்களும், எமது கட்சியும் நிறைய வேலை செய்கின்றோம். இந்த கோவிலை கட்டுவதற்கு ஏதாவது உதவவி தேவையாக இருந்தாம் எமது சமய கலாசார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து உதவி செய்வோம். நிதி பற்றாக்குறை காரணமாக கோவில் கட்டுமாணம் இடை நடுவில் நிற்பதாக அறிகின்றோம்.
எமது சமய கலாசார அமைச்சின் ஊடாக அந்த நிதியை பெற்றுத் தரலாம் என நினைக்கின்றோம். ஊடகவியலாளர்கள் இந்த சம்பவத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டும். மக்களை பிழையாக நடத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.


