நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளன.
நீண்ட காலத்திற்கு பின்பு மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11 மற்றும் 13ஆம் தர வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11, 13ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.
இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நியமங்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கும் நோக்கில் பாடசாலைகளுக்கு அருகாமையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சுகாதார மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்க்பபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் அதிகளவான வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கல் மேற்கொள்ளப்பட்டு துப்பரவுப் பணிகள் இடம்பெற்று, கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று முதல் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செய்திகள் - திலீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. கோவிட் அச்சுறுத்தல்கள் தொடர்கின்ற போதிலும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் இருந்ததாக வலய கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 09ஆம் திகதி இரண்டாம் தவனை விடுமுறை கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.