விபத்துக்குள்ளான மற்றுமொரு விமானம்! இராஜாங்க அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
சக்குராய் (Sakurai) தனியார் நிறுவனத்தின் அனைத்து விதமான விமான சேவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி, பயாகல கடற்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், அதே நிறுவனத்துக்கு சொந்தமான செஸ்னா 172 ரக விமானமொன்று சீகிரியவிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டான – கிம்புலாப்பிட்டி பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, அதில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சக்குராய் ஏவியேஷன் லிமிட்டட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நால்வருக்கு காயம் ஏற்படுத்திய இன்றைய விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! சம்பவ இடத்தில் விமானப்படை : நால்வர் வைத்தியசாலையில்



