கோட்டாபயவின் கோரிக்கையை ஏற்க மறுத்த சஜித் தரப்பு
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரிடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து பின்வாங்கிய தரப்பினரே சஜித்தின் கூட்டணி எனவும் அவர் சாடியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்
தேவையான ஆவணங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஹர்ஷடி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகியோருடன் சஜித் பிரேமதாசவும் அப்போது அலுவலகத்தில் இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
''ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து நான் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
நாடு வங்குரோத்தான சந்தர்ப்பத்தில் எதிர்கட்சியினர் எவ்வாறு நடந்துக்கொண்டனர் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளின் சகாப்தம் தொடங்கியது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து, நாட்டைக் பொறுப்பேற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அப்போது, திறைசேரி ஆவணங்களைப் பார்த்து, எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியில் உள்ள பொருளாதார நிபுணர்களும், அடுத்த 6 மாதங்களில் பொருளாதாரம் வெடித்துச் சிதறும் என தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்க
ஆனால் ரணில் விக்ரமசிங்க பொருளாதாரப் பிரச்சினையை வேறுவிதமாகப் பார்த்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்தார். தேசிய பாதுகாப்பு என்பது எல்லைகளை பிரிப்பது அல்ல. ஒரு நாடாக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்க முடியாத நிலைக்கு இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தேசிய பாதுகாப்பின் முதன்மையான பணியாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதனைச் சரியாகச் செய்ய முடிந்தது. அவருடைய திறமைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மறுநாள் நான் பங்களாதேஷத்தின் பிரதமரை சந்தித்தேன்.
200 அமெரிக்க டொலர் கடனை இலங்கை திருப்பி செலுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இன்று நமது நாடு திவால் நிலையில் இருந்து மீண்டு ஈரானின் கடனின் தவணை கூட கட்டத் தொடங்கியுள்ளது.
இவை அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரப் பார்வையின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்க விக்கிரமசிங்கவினால் மட்டுமே முடியும் என்பதை இந்த நேரத்தில் நான் பிரகடனப்படுத்துகின்றேன்" என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |