புதிய நகர்வுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02) ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும், இதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்புக் கடனாகவும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர் பலதரப்புக் கடனாகவும், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகக் கடனாகவும், 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்ச வேலைத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயணித்து. தற்போது எவ்வாறு வெற்றிகரமான பிரதிபலன்கள் எட்டப்பட்டுள்ளன.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் அளவு 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு அதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களகாகும்.
சர்வதேச நடைமுறை
11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்புக் கடன்களாகும். 14.7 பில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்களாகும். அதில் 12.5 பில்லியன் டொலர்கள் பிணைமுறிப் பத்திரங்கள்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து, பல்வேறு கருத்துக்கள் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவிக்கப்படுகின்ற போதும் அவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது.
என்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது.
எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது. பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை.
சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு என்பவற்றுக்கு சலுகை பெற முடியும்.
அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.
கடன் மறுசீரமைப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநர்கள் அல்லது கடன் பெற்றவர்களுக்கு இல்லை. அது தொடர்பில் தீர்மானம் எடுப்பது சர்வதேச நாணய நிதியம். ஒரு நாட்டில் கடன் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தேவையான மறுசீரமைப்புத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கிறது.
முதல் நடுத்தர வருமான நாடு
நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை, பகுப்பாய்வுக் கட்டமைப்பை, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக பயன்படுத்திய முதல் நடுத்தர வருமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது.
எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக நிலவிய வரிசையை முடிவுக்கு கொண்டு வந்தமை சிறந்த செய்தியா ? துரதிஷ்ட செய்தியா ? நாட்டு மக்கள் தீர்மானிப்பார்களாக?
நெருக்கடியான நிலையில் அரசியல் அதிகாரத்துக்கும் அரசியல் பிரபல்யத்துக்காகவும் நான் தீர்மானங்களை எடுக்கவில்லை. நாட்டுக்காகவே கடுமையான தீர்மானங்களை எடுத்தேன். தற்போதைய புவிசார் அரசியல் போக்குகள் உட்பட பல சவால்கள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், சர்வதேச நாயண நிதியத்தின் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 15 மாதங்களுக்குள், உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கு உடன்பாட்டை எட்ட முடிந்தது.
இவ்வாறான குறுகிய காலத்தில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் முதன்மை நாடாக இலங்கை முன்னணியில் இருப்பது ஒரு சிறப்பான வெற்றியாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2028 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, 2.1% அல்லது அதற்குக் குறைவான வட்டி விகிதங்களைப் பேணுதல், கடனை முழுமையாகச் செலுத்த 2043 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பன எட்டப்பட்ட உடன்பாடுகளில் உள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடன் சேவைச் செலவை ஒத்திவைக்கக் கூடிய வகையில் பிரதான கடன் தொகையினை திருப்பிச் செலுத்துவது படிப்படியாக அதிகரிக்க நேரிடும்.
இதன் விளைவாக 05 பில்லியன் டொலர் இலங்கைக்கு கடன் சேவைத் தொகை மீதமாகும். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இணக்கப்பாடுகளினால் பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், கையிருப்புக்களை மீளக் கட்டியெழுப்புதல், அரச நிதி உத்தரவாதங்களை உருவாக்குதல் மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடனைச் செலுத்தும் வகையில் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
2023 ஆம் ஆண்டில், இலங்கையின் நிதி நிறுவனங்கள் பலவீனமடையாத வகையிலும், வைப்பாளர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மறுசீரமைப்பு பணி
10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பணி வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
14 7 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகக் கடனை மீளமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். கடன் மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து உடன்படிக்கைகள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தின் அரச நிதி தொடர்பான குழுவிற்கு சமர்ப்பிப்பதாகவும் அது குறித்து ஆழமான பரந்த கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் சரியான பாதையில் சென்றதன் காரணமாக குறுகிய காலத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் அரசியல் அதிகாரத்துக்கும் அரசியல் பிரபல்யத்துக்காகவும் நான் தீர்மானங்களை எடுக்கவில்லை. நாட்டுக்காகவே கடுமையான தீர்மானங்களை எடுத்தேன்.
பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் பொருளாதார உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் திருத்தங்களுடன் சட்டமூலத்தை நிறைவேற்றலாம்.
அரசாங்கம் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கை மாற்றமடையும் பாரம்பரிய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதை வங்குரோத்து நிலையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக ஒன்றிணையுங்கள் என்பதை எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.
தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது. இந்நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 37 பில்லியன் டொலர்களாக இருந்தாகவும் தான் ஆட்சிக்கு வந்தபோது அது 71 பில்லியன் ஆக இருந்தது. அது தற்போது 100 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அநுர திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் பொய்யான புள்ளிவிபரங்களை வழங்கி கீழ்த்தரமான அவமதிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் வழங்குநர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கைக்கு மீண்டும் இருதரப்பு வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
வெளிநாட்டுக் கடன்
வெளிநாட்டுக் கடன் உதவியில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.
அன்றாட உணவுத் தேவைகள், சம்பள அதிகரிப்பு, அரசாங்க தொழில் வழங்குதல், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், மின்சாரம் என்பவற்றை வழங்குதல் மற்றும் அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்ட வெளிநாட்டுக் கடன் உதவிகளைப் பயன்படுத்தியமை என்பன சுதந்திரத்தின் பின்னர் இலங்கை செய்த பாரிய தவறுகள்.
சில அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் தாம் வழங்கும் சலுகைகள் குறித்து ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கினாலும் அதற்காக பணம் திரட்டும் முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ் தேசிய பிரச்சினைகள் சம்பந்தனின் ஆயுட்காலத்தில் தீர்வுகாணப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அது சாத்தியமாகவில்லை.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |