இலங்கையில் பள்ளிவாசலொன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
இலங்கையில் அக்குரண பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு முன் உளவுத்துறை தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தெரிந்து கொள்ள எமது செய்திப் பிரிவு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவை தொடர்பு கொண்ட போதும் விபரங்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.