இலங்கையில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத்தியவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர அவை இரத்து செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் (Mujibur Rahman) நேற்று (05.06.2024) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"க.பொ.த உயர்தர பரீட்சையின் போது காதுகளை மறைத்தவாறு ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கருவி பயன்பாடு
இவ்வாறு பரீட்சைக்கு தோற்றும் போது சூட்சமான முறையில் காதுக்குள் கருவிகளை வைத்திருக்க முடியும்.
இதன் காரணமாகவே, பரீட்சையின் போது காதுகள் தென்படும் வகையில் உடைகள் அணியுமாறு குறிப்பிடப்படுகிறது.
மேலும், ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்” என விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான்,
"அதிபர் சேவை பரீட்சைக்கு மேல் மாகாணத்தில் தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வகையில் பரீட்சைக்கு தோற்றியதற்காக அவர்களின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அனுமதி
ஹிஜாப் அணிந்த வகையில் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
பரீட்சார்த்தியின் காதுகள் தென்படும் வகையில் அவர் இருத்தல் வேண்டும் என பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டால் அதற்கு பரீட்சார்த்தி கட்டுப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அவரை பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியேற்ற முடியும்.
மேல் மாகாணத்தில் அதிபர் பரீட்சைக்கு தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வண்ணம் பரீட்சைக்கு தோற்றியதாக குறித்த பரீட்சை நிலையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டு பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |