உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்..! பரீட்சை ஆணையாளர் நாயகம் தகவல்
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று(10.08.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடமையில் தவறும் ஊழியர்கள் மீது
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது. இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராகப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில், மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாகச் செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.