நாட்டை உலுக்கிய அக்குறணை கோர விபத்து! உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின
கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை 7ஆம் மைல் கல் பகுதியில் சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்ததோடு, மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அக்குரணை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்து
லொறி சாரதி, தன் கட்டுப்பாட்டை இழந்தமையினால், வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தின்போது சுமார் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதியிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை (Negative) என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இருவரின் நிலை கவலைக்கிடம்
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரின் நிலை ஆபத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களுமே கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பல கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
you may like this video