நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் பிணையில் செல்ல அனுமதி
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த அகிலன் முத்துக்குமாரசாமி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல் பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு இலக்காகி, நீதிமன்றத்துக்குச் சமுகம் தராதமையால் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அகிலன் முத்துக்குமாரசாமி காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மன்றில் பிரசன்னமானார். அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் முன்னிலையானார்.
அவதூறு விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட இலத்திரனியல் பத்திரிகையில் வெளியான செய்தி தம்முடையதே என்று உறுதிப்படுத்தினார் அகிலன்.
பிடியாணை நடைமுறை
எனினும், அதில் அவர் நீதிமன்ற அவமதிப்பு எதனையும் செய்யவில்லை என்றும், அதனால் குற்றம் எதுவும் இழைக்கப்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
செய்தி முழுமையாக தம்முடையதுதான் என்று அகிலன் முத்துக்குமாரசாமி ஏற்றுக்கொள்கின்றமையால், அவரைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை எழவில்லை என்று மேற்படி நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை சுமத்தும் எதிராளியான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
எனினும், அவர் இழைத்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் தொடர்பில் தமது வாதத்தையும் சமர்ப்பணங்களையும் எழுத்தில் தாம் சமர்ப்பிப்பார் என்றும் சுமந்திரன் சொன்னார்.
அதற்கும் ஜூலை 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி வழக்கை அந்தத் திகதிக்கு மன்று ஒத்துவைத்தது.
அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிரான பிடியாணை நடைமுறையில் உள்ளமையால் மன்றில் உரிய பிணைகளைச் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னர் அவர் வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உரிய பிணைகளை அவர் சமர்ப்பித்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |