யாழ்.தையிட்டியில் தொடரும் குழப்பம்! நான்கு பெண்கள் உட்பட 9 பேர் கைது (Video)
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன்போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்துள்ளனர்.
அதனை மீறி அங்கு நின்றவர்களைச் சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்தவேளை, அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஒன்பது பேரையும் இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
யாழ். வலிகாமம் - தையிட்டியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தொடர்ந்து இரு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த இடத்திற்குப் பெண் பொலிஸார் வராத போதும், கட்சியின் மகளிர் அமைப்பின் தலைவியைக் கைது செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முதலாம் இணைப்பு
யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்ட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த விடயம் தொடர்பில் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கும் போது செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்படவில்லை என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
