ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை எரிபொருள் திட்டத்துக்கு விமான நிறுவனங்கள் போர்க்கொடி
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பசுமை எரிபொருள் விதிகளுக்கு எதிராக ஐரோப்பிய விமான நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
2030-ஆம் ஆண்டு முதல் விமானங்கள் குறிப்பிட்ட அளவு செயற்கை பசுமை எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய விதியைத் தள்ளிவைக்க அல்லது இரத்து செய்ய வேண்டும் என விமான நிறுவனங்கள் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன.
பாரிய செலவினங்கள் மற்றும் சந்தையில் இந்த எரிபொருள் போதிய அளவில் கிடைக்காததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கோரிக்கை
குறிப்பாக, ஈரான் போர் சூழலால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இத்தகைய கடுமையான விதிகள் தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் (Air France-KLM), லுஃப்தான்சா (Lufthansa) மற்றும் ரையான்ஏர் (Ryanair) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய 'Airlines for Europe' (A4E) அமைப்பு வாதிடுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க இந்த விதிகள் அவசியம் என ஐரோப்பிய ஆணையம் கருதினாலும், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு வாகனத் துறையைப் போலவே தாராளமயமாக்கலை விமானத் துறையும் எதிர்பார்க்கிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாநாட்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை விமான நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் முன்வைக்க உள்ளனர்.
விமானத் துறை
அதே சமயம், இந்த விதிகளைத் தள்ளிப்போடுவது பசுமை எரிபொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் இலக்குகளைப் பாதிக்கும் என்றும் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

உற்பத்தி சீராகும் வரை இந்த இலக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே தற்போதைய விமானத் துறையின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.