இலங்கை வான்பரப்பில் ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு
இலங்கையின் வான்பரப்பில் ஏற்படும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த குழுவை நியமித்துள்ளார்.
இதன்படி, விமான விபத்து விசாரணையாளர்களின் முதல் தொகுதிக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. அதன் போது ஏழு விமான விபத்து ஆய்வாளர்கள் அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் வான்வெளியில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுப்பதற்கு, துல்லியமான தகவல்களைக் கண்டறிந்து, விமான விபத்துக்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, இலங்கை விமான சேவைத் துறையின் விமான விபத்து ஆய்வாளர்கள் வரலாற்றில் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ICAO தரநிலைகளை பின்பற்ற வேண்டும்
உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையின் ஒழுங்குமுறைப் பாத்திரத்தை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) ஆற்றுவதாகவும், இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ICAO தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இதன் போது உரையாற்றிய அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
”இவ்வளவு காலமாக, உள்நாட்டு வான்வெளியில் நடந்த விமான விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை துல்லியமாக நடத்த எந்த நிறுவனத்திடமும் சரியான திட்டம் இல்லை” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஆழமான ஆய்வுக்குப் பின்னர், விமான விபத்து விசாரணையாளர்களின் சுயாதீன குழுவை உருவாக்குவதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி விமான விபத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும்
இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை முன்னேற்றத்திற்கான ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்.
"எனவே, இந்த நடவடிக்கைகளுக்காக தாமதமின்றி விமான விபத்து விசாரணைப் பணியகத்தை நிறுவுவதற்கு விமான போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து விசாரணையாளர்களுக்கான பயிற்சியானது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) வகுத்துள்ள தரங்களுக்கு இணங்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையால் நடத்தப்படுகிறது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் சுதந்திரமான அமைப்பாக இந்தக் குழு செயல்படும். மேலும், தற்போது அமைச்சின் கீழ் இயங்கும் குழு எதிர்காலத்தில் விபத்து விசாரணைப் பணியகமாக செயற்படத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

சினிமா வரலாற்றில் சம்பள விஷயத்தில் புதிய முயற்சி எடுத்துள்ள நடிகை சமந்தா.. குவியும் வாழ்த்து Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
