அந்நிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய பயிர் செய்கை நடைமுறைகள்! மகிந்த அமரவீர
விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் குறுகிய நிலப்பரப்பில் அதிக விளைச்சலை பெறக் கூடியதும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய பயிர் செய்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வாகரை மாங்கேணி கேலிஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
வாகரை பிரதேசத்தில் பிப்பிங்காய் (கக்கரிக்காய்) உற்பத்தியில் மேற்படி திட்டத்தின் ஏற்றுமதி மூலம் 34.8 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி பெறப்பட்டுள்ளது என்றும் குறித்த திட்டத்திற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர் செலவானதாகவும் முழுதிட்டத்திற்கான செலவை விட வருமானம் தாண்டி நிற்கிறது என்றார்.
இதேபோன்று அனுராதபுரத்தில் இத்திட்டத்தின் கீழ் நவம்பர் 26 ஆம் திகதியில் இருந்து புளிக்கதலி வாழைப்பழம் வாராந்தம் ஒரு கெண்டயினர் டுபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொய்யா, மா, மிளகாய் போன்றவை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இந்திய இன மாதுழம் பழச் செய்கையும் கட்டம் கட்டமாக செய்கை பன்னப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் தேவையினை 50 வீதம் ஏனும் பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் இவ்வாறான திட்டம் மூலம் இளைஞர்கள் வெளிநாடு செல்லவோ அரசாங்க வேலைவாய்ப்பினை நம்பி இருக்கவோ தேவையில்லை. சுயதொழிலில் ஈடுபட்டு பாரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்கு நல்லதெனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய பிரதி திட்டப்பணிப்பாளர் ஆர்.ஞானச்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் வாகரை பிரதேசத்தில் மாங்கேணி மற்றும் கதிரவெளி ஆகிய கிராமங்களுக்கு சென்ற அமைச்சர் மாங்கேணியில் பிப்பிங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் பயிர் செய்கையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பிப்பிங்காய்களின் உற்பத்தியில் விற்பனை விலை தமக்கு போதாமல் உள்ளதமாகவும் அதன் விலை அதிகரிப்பின் நிர்ணய விலையினை தீர்மானித்து தருமாறும் குடியிருப்பு காணிகளுக்கு மின்சாரம் இல்லாமல் உள்ளதாகவும் அதனை பெற்றுத் தருமாறும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
வாகரை பிரதேசத்தில் தற்போது சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பிப்பிங்காய் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாங்கேணியில் பிப்பிங்காய் பதனிடும் கேலிஸ் நிறுவனத்தையும் பார்வையிட்டதுடன் கதிரவெளியில் நிலக்கடலை பதனிடும் மையத்தில் நிலக்கடலை பதனிடல் தொடர்பான விடயங்களையும் அவதானித்தார்.
பின்னர் களுவாஞ்சிக்குடியில் இந்திய மாதுளை பழப் பயிர் செய்கை நடவடிக்கையினையம் பார்வையிட்டதுடன் 6 கோடி ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரம், கலப்பை உட்பட உதிரிப்பாகங்கள் என்பன விவசாய நவீன மயமாக்கல் பயனாளிகள் சங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் பிரசன்னமாயிருந்தார். கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.