சுனாமி ஏற்பட்ட கடற்கரையை போல் மாறிய நுவரெலியாவின் விவசாய நிலங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சுனாமி ஏற்பட்ட கடற்கரையைப் போல் மாறியுள்ளன.
இங்கு பயிரிடப்பட்டு இருந்து சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மரக்கறி தோட்டங்கள் வெள்ளத்தால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள் சுமார் கோடிக்கணக்கணக்கில் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பயிர்கள் அழிவு
குறித்த பகுதியில் ஒரு ஏக்கர் தொடக்கம் ஐந்து ஏக்கர் வரை ஒரு சிலர் விவசாயம் செய்திருந்ததுடன் அவர்கள் கரட்,லீக்ஸ் போஞ்சி பீட்ரூட் உள்ளிட்ட பல மரக்கறி வகைகளை பயிர் செய்து இருந்தனர்.

ஒரு சிலரது விவசாயம் அறுவடைக்கு நெருங்கியிருந்த நிலையில் குறித்த பகுதிக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் பலர் பாரிய நட்டத்தினை அடைந்துள்ளனர்.
பலரது விவசாய காணிகள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன.பல லட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டடிருந்த நீர் கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன.
நீர் பாய்ச்சும் இயந்திரங்கள் மண்ணில் புதையுண்டு உள்ளதுடன் பல காணாமலும் போயுள்ளன.
கோரிக்கை
வீட்டிலிருந்த தங்க நகைகளையும்,கடன் பெற்றும் பெருவாரியானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதாகவும் தற்போது அனையத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்துள்ளதாகவும் பலர் தெரிவித்தனர்.

தற்போது விவசாய நிலங்கள் காணப்படும் நிலையில் மீண்டும் பண்படுத்துவதற்கு பாரிய செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
எது எவ்வாறான போதிலும் மலையக பகுதியில் உள்ள விவசாய காணிகள் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு பாரிய நட்டத்தினையும் சந்தித்துள்ளனர். எனவே அரசாங்கள் இவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.