எழிலன் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கு தவணையிடப்பட்டது(Photos)
விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றால் இன்று(16) அறிவிக்கப்படவிருந்த நிலையில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆயராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இறுதிப்போரின் கடைசி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவிற்கான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்படவிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது.
அந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தத்தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றம் இன்று எமக்கு அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் வருடம் மாசிமாதம் 14 ஆம் திகதி இந்த உத்தரவு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இலங்கை இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபருக்கும் எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை இராணுவமும், அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற விடயத்தினை கருப்பொருளாகக் கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கில் இராணுவத்தின் சார்பாக அவர்களுடைய சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட
அரசசட்டவாதி யொகான் அபேவிக்கிரம பிரசன்னமாகியிருந்தார். வழக்கினை தாக்கல்செய்த
மனுதாரர்களான முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் ஏனைய காணாமல்
போனவர்களின் குடும்பத்தினரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.





இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
