சிங்கள வேதாளம் மீண்டும்13 ஐ உபதேசிக்கிறது
இலங்கைத்தீவு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் சிங்கள தேசத்தின் ராஜதந்திர மூளை தமிழர்களின் மனநிலையை நாடிபிடித்துப் பார்க்க யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டது.
அவ்வேளை, பயணத்தின் போது தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அதிகாரம் வேண்டும் என யாழ். கல்விமான்கள் ரணிலைப் பார்த்து கேட்டபோது "உங்களுக்கு 13 தீர்வாக இருக்கிறதே" எனக் கூறிவிட்டு சிங்கள தேசத்தின் வேதாளம் கொழும்புக்கு கிளம்பிவிட்டது.
தமிழ் மக்கள் இமோஷனல் இடியட் ஆக (emotional Idiots) இருக்கிறார்கள் என்பதை சிங்களதேசம் நன்கு உணர்ந்துள்ளது.
அதன் அடிப்படையில் தான் தற்போது எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால், சிங்களதேசம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடியை சமாளிப்பதற்காகவே ரணில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டார்.
அந்த பயணத்தின் போது தமிழ் மக்களை திசை திருப்பி இமோஷனல் இடியட்டுக்களாக அலையவிடும் கவனக்கலைப்பு தந்திரம் ஒன்றைச் செய்துள்ளார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
தமிழர் தரப்பு ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவதை தடுப்பதற்கான முயற்சியாகவே 13 என்கின்ற பொறியை மீண்டும் வீசி இருக்கிறார்.
இனி தமிழ் அரசியல் தலைமைகள் 13 வேண்டுமென்றும், வேண்டாம் என்றும், பதிமூன்று பிளஸ் என்றும் மீண்டும் விவாதித்து அக்கப்போர் நடத்துவர்.
தமது எதிர்கால அரசியல் வேலை திட்டங்களை கைவிட்டு வெறும் வாய்சண்டைகளில் ஈடுபட்டு காலத்தை கடத்துவர். அதுவே சிங்கள தேசத்தின் விருப்பமாகும்.
இங்கே 13ம் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளதா? அதனை நடைமுறைப்படுத்துவதற்கான யதார்த்தம் சிங்கள தேசத்தில் உள்ளதா? அல்லது இந்த 13 தமிழர்களுக்கு ஒரு தீர்வாக அமைய முடியுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் 13ஆம் திருத்தச் சட்டம் வேண்டாம் என ஊளையிடுவோரும், 13 வேண்டும் என கதறுவோரும் அடிப்படையில் சிங்கள தேசத்திற்கு சேவகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
13 என்பதனை தத்துவார்த்த ரீதியில் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவையும் ஈழத் தமிழர்களையும் ஒரே பலிபீடத்தில் வைத்து பலி கொடுப்பதற்கான சிக்கலான சக்கர வியூகமாகவே (Entanglement) ஜே ஆர் ஜெயவர்த்தன வடிவமைத்தார்.
அதனை அன்று தமிழ் மக்களும், இந்தியா ராஜதந்திரிகளும் புரிந்து கொள்ளவில்லை.
13ஆம் திருத்தத்தின் அதிகாரங்கள்
அது இன்றும் 36 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்குமான ஒரு Entanglement ஆக அதாவது வெளியேற முடியாதவாறு சிக்கலான அந்த சக்கர வியூகத்துக்குள் அகப்பட்டு அதிலிருந்து இருதரப்பினரும் வெளியேற முடியாமல் சிங்கள ராஜாதந்திர சகதிகுழிக்குள் வீழ்த்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளனர்.
இன்று இலங்கை அரசியல் யாப்பில் இருக்கின்ற 13ம் திருத்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இந்த 13 ஆம் திருத்தச் சட்டம் அன்றைய காலத்தில் தமிழ் மக்களுக்கு ஓரளவான அதிகாரத்தை வழங்கக்கூடிய சரத்துக்கள் இருந்தன.
ஆனால் இப்போது அந்த சரத்துக்கள்கூட பழம் இருக்க சுளை பிடுங்குவது போல வெட்டி அகற்றப்பட்டுவிட்டன. எனவே அதில் இப்போது எந்த அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இல்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பிராந்திய அலகு என்ற ஒரு சட்ட வரைவு இருப்பதை தவிர வேறு ஒன்றும் அதில் இல்லை.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் என்ற ஒரு சட்டம் கடந்த 36 ஆண்டுகளாக சிங்கள அரசாங்கத்தால் அல்லது சிங்கள அரச இயந்திரத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும், அது பேரளவில் அவ்வப்போது தேவைக்காக பொய்யாக நடைமுறைப்படுத்தப்படும்.
அதிகாரத்துக்கு வருகின்ற சிங்களத் தலைவர்களால் தமிழ் தலைமைகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படும். அவ்வாறே அவ்வப்போது இந்திய ராஜதந்திரர்களுக்கு 13 நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும் இலங்கை அரச தரப்பு இந்திய தரப்பை ஏமாற்றும்.
அதிகார பகிர்வு
இந்திய தரப்பிற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி காலத்துக்கு காலம் இலங்கைக்கு பொறுப்பாக இருக்கின்ற அல்லது இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் தமிழ் தலைமைகளுக்கு நம்பிக்கை ஊட்டி பேசுவார்கள். தமது பதவிக்காலம் முடிந்ததும் அவர்கள் சென்று விடுவார்கள்.
ஆனாலும் இலங்கை தீவில் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஒரு மாயமான். அந்த மாயமான் அவ்வப்போது தேவைக்காக காண்பிக்கப்படும்.
அத்தகைய ஒரு நடைமுறைதான் இப்போது யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிங்கள வேதாளம் தமிழ் மக்களுக்கு தீர்வு 13 என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டது.
உண்மையில் 13 என்பது தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டமா? அதனை அறிவார்ந்த ரீதியில் அரசியல் விஞ்ஞான விளக்கத்துடன் பார்க்கின்ற போது அது 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.
அந்த அரசியலமைப்பின் ஒரு பகுதியாகிய 13ஆம் திருத்தச் சட்டம் குறிப்பிடப்படுகின்ற தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு தமிழ் மக்களுக்கு தீர்வாக நடைமுறையில் அமையவில்லை.
அதில் தமிழ் மக்களுக்கு உள்ள உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களால் பயன்படுத்தவோ நடைமுறைப்படுத்தவோ பிரயோகிக்கவோ முடியவில்லை.
எனவே 13 தமிழ் மக்களுக்கு எந்த நலனையும் பயக்கவில்லை என்ற அடிப்படையிலுமே இலங்கை அரசை எதிர்த்து தமிழ் மக்கள் ஒரு பெரும் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர்.
சிங்கள மக்களின் நம்பிக்கைகள்
13 என்பது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டமே கிடையாது என்பதை முதலில் திட்டவட்டமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் சிங்கள தேசத்தின் பட்டி தொட்டி எங்கும் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஏதோ தமிழ் மக்களுக்கு பெரும் அதிகாரங்களை கொடுத்தது போன்ற பிரம்மையை சிங்கள ஊடகங்களும் சிங்கள தலைமைகளும் பௌத்த மத பீடங்களும் உருவாக்கிவிட்டு இருக்கின்றன.
பதின்மூன்றை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தீவு இரண்டாக உடைந்துவிடும் என்ற கருத்துருவாக்கத்தை சிங்கள மக்களின் பொது புத்தியில் சிங்கள தலைமைகளினால் கட்டமைப்பு செய்யப்பட்டுவிட்டது.
எனவே 13ஐ நடைமுறைப்படுத்துவது என்று கூறுவதோ அல்லது சமஷ்டி என்று கூறுவதோ இரண்டையும் சிங்கள மக்கள் ஒரே தராசில் வைத்து பார்க்கிறார்கள்.
இந்த இரண்டையும் பற்றி சிங்கள தேசத்தில் யார் பேசினாலும் அவர் சிங்கள மக்களினால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்படும் நிலையே தோன்றியிருக்கிறது.
அது மட்டுமல்ல இந்த 13 என்பது இந்திய அரசால் சிங்கள தேசத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு அதிகார அத்துமீறல் என்றும் இந்திய ஆக்கிரமிப்பின் குறியீடு என்றும் இந்தியா சிங்கள தேசத்தை அடக்குவதற்கான ஒரு அங்குசம் என்றும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் விதைக்கப்பட்டு, அது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.
எனவே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக 13 என்றோ, சமஸ்டி என்றோ சிங்கள தேசத்தில் யாரும் பேசப்போவதில்லை.
அவ்வாறு பேசியவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்குலத்தை கூட நகர்த்த மாட்டார்கள் என்பதுமே சிங்கள தேச களயதார்த்தம்.
ரணிலின் வியூகங்கள்
ஆனாலும் இப்போது மீண்டும் சிங்கள வேதாளம் முருங்கை மரத்திலேறி 13 பற்றி உபதேசிக்க தொடங்கிவிட்டது என்பதைத் தமிழ் தரப்புகள் சரிவர உணர்ந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில், தான் வெற்றி வாகை சூடுவதற்கான அனைத்து வியூகங்களையும் இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டார்.
அதனால் தான் தமிழர் தரப்பை குழப்புவதற்காகவே 13 என்கின்ற குண்டை யாழ்ப்பாணத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்.
எனவே ஜனாதிபதி தேர்தல் முடியும் வரைக்கும், அதைத் தொடர்ந்து ரணில் தான் இலங்கையின் சிம்மாசனத்தில் அமரும் வரைக்கும் 13 பற்றியே தமிழர்களுடன் பேசுவார்.
இந்திய ராஜதந்திரிகளுக்கும் அதனையே சொல்வார். ஆனால் நடைமுறையில் எதனையும் செய்ய மாட்டார். இது முற்றிலும் எதார்த்த பூர்வமானதும், நித்தியமானதும்.
இலங்கை தீவில் ஒருபோதும் 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. 36 வருடங்களாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலும் இந்திய அரசின் அழுத்தங்களுக்கு தாக்குபிடித்தும் காலத்தை கடத்தியவர்களுக்கு இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு ஏமாற்றி காலத்தை கடத்துவது என்பது ஒரு பெரிதான காரியமுமல்ல.
ஜனாதிபதித் தேர்தல்
கடந்த எட்டு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் அதிகூடிய வாக்கு விகிதத்தை 1994இல் சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா 62.28 % வாக்குகளை பெற்றிருந்தார்.
அடுத்தபடியாக முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள தேசத்தின் கதாநாயகனான ராஜபக்ச 2010ல் 57.88% வீதமான வாக்குகளை பெற்றிருந்தார்.
ஏனைய தேர்தல்கள் அனைத்திலும் 53% வீத வாக்குகளை யாரும் தாண்டவில்லை. 2005 தேர்தலில் தமிழர் தரப்பு பகிஸ்கரித்தபோது மகிந்த ராஜபக்ச 50.29% வாக்குகளையே பெற்று அரும்பொட்டில் வெற்றி பெற்றார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என்பது சிங்கள தேசத்திற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுப்பதில் சவாலான தேர்தலாகவே அமையப் போகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் 12% ஈழத்தமிழ் மக்கள் உள்ளனர்.
எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று வாக்களித்தால் வெற்றியாளர்களை தெரிவு செய்கின்ற வாக்குகளிலும் தாக்கம் விளைவிக்கக் கூடிய சக்தி தமிழ் மக்களிடம் உண்டு.
எனவே தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்கள் அந்த வேட்பாளருக்கு வாக்களித்தால் சிங்கள தேசத்தில் தேர்தலில் முதலாம் சுற்று எண்ணில் யாரும் வெற்றிபெற முடியாத ஒரு நெருக்கடியை தமிழ் மக்களால் சிங்கள தேசத்திற்கு வழங்க முடியும்.
எனவே இரண்டாம் மூன்றாம் சுற்று வாக்குக்களில் தான் இலங்கையின் ஜனாதிபதி நாற்காலியில் அமர்வது என்பது அவர்களுக்கு ஒரு கௌரவ குறைச்சலாக அல்லது அங்கீகாரக் குறைச்சலாக அமையும்.
இது சிங்கள தேசத்தின் அரசியலை தமிழ் மக்கள் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதையும் உணர்த்தும். எனவே இன்றைய மக்கள் இறைமை யுகத்தில் (Sovereignty of people) தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அதற்குரிய இறைமை உண்டு.
தன்னைத்தானே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையும் (Right of Self determination) உண்டு. அத்தகைய ஈழத் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான, தம்மிடமே உள்ள இறைமையை பிரயோகிப்பதற்கான, வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த முடியும்.
தமிழ் மக்கள் தமக்கான ஒரு தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி தமிழ் மக்களின் இறைமையை பிரயோகித்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்து தமிழ் மக்களின் இறைமையை ஓர் இடத்தில் ஒன்று குவிப்பதன் மூலம் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தி தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட முடியும். அதனை ஒரு மக்கள் ஆணையாகவும் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முடியும்.
எனவே சிங்கள தேசத்தின் வாக்குறுதிகளுக்கும் சிங்கள சாத்தானின் வேதங்களுக்கும் விழுந்து விலைபோகாமல், ரணில் ஓதும் சாத்தானின் வேதத்துள் வீழ்ந்துவிடாது 13ஆம் சட்டம் என்று அவர் அவிழ்த்துவிடும் மாயமானைப் பின்தொடராமல், அதன் பெயரால் சண்டையிட்டு ரணில் விரும்பும் குழப்பத்துக்குள் வீழாமல், தமிழ் மக்களின் இறைமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதுதான் முதற்கண் சிறந்தது.
இன்றைய சூழலில் அதுவே தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்கான வழியை திறப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாயும் அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 19 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.