இந்தியா உட்பட 39 நாட்டு மக்களுக்கான இலவச விசா : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவு
இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது என்று அவர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான அடிகளைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய், மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பன அவையாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலவச விசா
இந்தநிலையில், இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன், அனைத்து நாடுகளின் ஆராய்ச்சி பயணங்களுக்குமான, ஒரு வருட தடைக்காலம் முடிவடைந்த பிறகும், இலங்கை, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை, குறிப்பாக சீனக் கப்பல்களை, இலங்கை துறைமுகங்களில் தரித்து நிற்க அனுமதிக்குமா? என்ற கேள்விக்கு ஹேரத் தெளிவான குறிப்பை தெரிவிக்கவில்லை என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள், மேலும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாக உள்ளனர்.
அத்துடன் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தீவுக்குத் திரும்ப விரும்பவில்லை என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.