தமிழர் பகுதியில் பெண்ணொருவரை தாக்கி தங்க நகைகள் கொள்ளை! மூவர் தப்பியோட்டம்
மட்டு. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (07.04.2023) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெண் மீது தாக்குதல்
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 இளைஞர்கள் சென்று வீடு ஒன்று வாடகைக்கு தேவை கூறி பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை நடத்திவிட்டு அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு மூன்று சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



