இலங்கையில் 39 ஆண்டுகளின் பின்னர் நுகர்வோர் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் 39 ஆண்டுகளின் பின்னர் நுகர்வோர் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய நிதி நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய இலங்கைப் பொருளாதாரத்தில், 39 ஆண்டுகளில் முதல் முறையாக நுகர்வோர் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்க சதவீதம்
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் பணவிறக்கம் பதிவாகியுள்ளது.
குடிசன மற்றும் புள்ளிவிபரத் துறை தரவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இறுதியாக 1985ம் ஆண்டில் பணவிறக்கம் பதிவாகியிருந்தது.
பணவிறக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளில் ஏற்படும் வீழ்ச்சியை குறிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்துகளின் தட்டுப்பாடு
இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் 69.8 சதவீதமாக இருந்தது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான தட்டுப்பாடு பல மாதங்களாக நடந்த போராட்டங்களுக்கு வழிவகுத்திருந்தது.
இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறி 2022 ஜூலையில் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவருக்குப் பின் வந்த ரணில் விக்ரமசிங்க 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பைப் பெற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வரிகளையும் விலைகளையும் உயர்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |