கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழான விவசாயிகள் பாதிப்பு
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கைக்கான இறுதித் தீர்மானங்களை எடுத்து பயிர்செய்கை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் எந்தவித தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படாது காலம் கடந்து செல்வதால் இரணை மடுக்குளத்தின் கீழான சுமார் 7500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் இரணை மடுக்குளத்தின் கீழ் சுமார் ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் இருபத்தி ஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் போக பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியான நோய் தாக்கம்
கடந்த 2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது தொடர்ச்சியான நோய் தாக்கம் மற்றும் வெள்ள பாதிப்பு என்பவற்றால் பதினைந்து வீதத்திற்கும் குறைவான விளைச்சலை பெற்றுக் கொண்டதுடன் விவசாயிகள் பாரிய நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளத்தின் பெரும் போக அறுவடை நிறைவு பெற்ற நிலையில் குளத்தின் நீர்மட்டம் முழுமையாக காணப்பட்டதுடன் தற்போது இதன் நீர்மட்டம் 35 அடி இரண்டாம் அங்குலமாக குறைவடைந்துள்ளது.
இதனால் இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்வதற்கான இறுதித் தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் கலந்துரையாட்களை மேற்கொண்ட போதும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாது தனிநபர்களினுடைய சுய இலாப நோக்கங்களால் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது காலம் கடந்து செல்கின்றன.
தான்தோன்றித்தனமான முடிவுகள்
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதுடன் பயிர் செய்கை அளவு குறைவடைகின்ற போது முறையற்றவர்களின் பங்கு வியாபாரத்திற்கும் வழி வகுத்து மாவட்டத்தின் உற்பத்தியில் வீழ்ச்சியையும் ஏற்படுத்துவதுடன் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதுடன் அடுத்த பெரும் போகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஊரியான் மேற்கு கமக்கார அமைப்பினால் நேற்று முன்தினம் (06-04-2024 ) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூடிய அறைக்குள் ஒரு சிலர் கூடி தீர்மானத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்த சிலரும் செயற்பட்ட வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது ஜனநாயக முறைப்படி விவசாயிகளுடன் பொது வெளியில் நடத்தப்பட வேண்டிய பயிர்செய்கை கூட்டங்களை பிரதேச மட்டங்களில் நடத்தப்படத்தாது தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து விவசாயிகள் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்று விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அபிவிருத்தி கட்டளை சட்டம்
ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் பங்கு பரிமாற்றங்கள் பயிர்செய்கைக்கு உள்வாங்கப்படாத பகுதிகளிள் நீர் வரிப் பங்குகள் உரிய சிபாரிசுகளின் அடிப்படையில் கமல சேவை நிலையங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள முத்தையன்கட்டுக்குளம், உடையார் கட்டுக்குளம், வவுனிக்குளம் போன்ற பாரிய நீர்ப்பாசன குளங்களின் கீழ் அபிவிருத்தி கட்டளை சட்டம் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி சட்டங்களின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்ற பயிர்செய்கை நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அத்துடன் காலம் தாழ்த்தாது சிறுபோக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |