ஜெனிவா விடயங்களை கையாள ஆலோசனை குழு! தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்
ஜெனிவா விடயங்களைக் கையாள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான ஆலோசனை குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் புனித திரேசா மண்டபத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை.
ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இன்றைய கூட்டத்தில் மிக ஆரோக்கியமான விடயங்கள் பகிரப்பட்டன.
ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஒருபொறி முறையை உருவாக்குவதற்கு ஒரு ஆலோசனை குழுவை அமைத்து அந்த ஆலோசனை குழுவினூடாக இந்த விடயங்களைக் கையாள வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஆயர் உட்பட ஏனையவர்களால் முன்வைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில் ஆலோசனை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைக்குழு கூடி ஏனைய விடயங்களை ஆராய்ந்து எவ்வாறான விடயங்களை முன்வைக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கும்.
அந்த குழுவிலே இன்று பிரசன்னமாகாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்து பயணிப்பதாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .