அவசரகால சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் ஒத்திவைப்பு
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்கள் ஆகஸ்ட் 12 ஆம் திகதி பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரஜீவ் குணதிலக்க ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்து விசாரணைக்கு அனுமதி வழங்க இரண்டு நீதியரசர்களை கொண்ட அமர்வு போதுமானது என்றாலும் இந்த விண்ணப்பங்கள் மூலம் இடைக்கால உத்தரவைக் கோரப்படுவதால் 3 நீதியரசர்களை கொண்ட அமர்வு அமைக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த மனுக்கள் அவசர தேவை ஒன்றின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை பரிசீலனை செய்வதற்காக நெருங்கிய திகதியை நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, மனுக்களை ஆகஸ்ட் 12-ம் திகதியன்று பரிசீலனைக்கு அழைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை
ஜூலை 18 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது அரசியலமைப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
மேலும் அவசரகாலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், மாற்றுக்
கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி
பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் லிபரல் இளைஞர் இயக்கத்தின் அழைப்பாளர்களான
நமினி பண்டித மற்றும் ருசிரு எகொடகே ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன.