கொழும்பு துறைமுகத்தில் தமது கட்டுமானத்தை ஆரம்பிக்கவுள்ள இந்தியாவின் அதானி துறைமுகங்கள்
இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பு துறைமுகத்தில் 20 அடிக்குச் சமமான 3.5 மில்லியன் யூனிட் முனையத்தில் தமது கட்டுமானத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில், 35 வருடக் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பரிமாற்றத்துக்கான (பிஓடி) சலுகை உடன்படிக்கை, எதிர்வரும் நவம்பரில் கையெழுத்திடப்பட உள்ளதாக, தெஹிந்து பிசினஸ்லைன் இணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகங்கள் நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் லிமிடெட், கடந்த மார்ச் மாதத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது.
இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில், கொழும்பில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்காக இந்த கடிதம் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்திய அதானி குழுமத்தினால், 35 வருட காலத்திற்குள் உருவாக்கப்படும். 1400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழமான, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம், பாரிய கொள்கலன்களைக் கையாளும் இடமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.