விவசாயிகளின் பாராட்டை பெற்ற துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கம்
முல்லைத்தீவு - துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கம் தமக்கு கிடைக்கப்பெற்ற டீசலை நீண்ட தூரங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கியமையால் அவர்கள் விவசாயிகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி அன்று மல்லாவி எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற டீசலே இவ்வாறு பாரவூர்தியில் ஏற்றிசெல்லப்பட்டு விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
இதனடிப்படையில், அம்பலபெருமாள் குளம், கோட்டைகட்டிய குளம், புத்துவெட்டுவான் பழைய முறுகண்டி, கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடைக்கு தேவையான டீசல் வழங்கப்பட்டுள்ளதாக பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலபெருமாள் குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள விவசாயிகளுக்கு பாரவூர்தியில் ஏற்றிசென்று டீசலை கோட்டைகட்டியகுளம் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளையில் வைத்து வழங்கியுள்ளனர்.
புத்துவெட்டுவான் கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட விவசாயிகளுக்கும், பழைய முருகண்டி கிராமசேவகர் பிரிவில் உள்ள விவசாயிகளுக்கும் புத்துவெட்டுவான் பலநோக்கு கூட்டுறவு சங்ககிளையில் வைத்து டீசல் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான தீர்வு
கடந்த ஒருமாத இடைவெளியின் பின்னர் மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கிடைக்கப்பெற்றதுடன் சிறுபோக அறுவடை காலமாகையால் டீசல் இன்மையால் அறுவடை செய்யமுடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்திருந்துள்ளனர்.
இதனால் தூர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மல்லாவி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த நிலையினை கருத்திற்கொண்டு கமநல சேவை திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலகம் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி! ஜனாதிபதி ரணிலின் கடுமையான உத்தரவு |