கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் - கரைச்சி பிரதேச செயலாளர்
கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த கிராம சேவையாளர் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் கிராம சேவையாளரே இவ்வாறு உரிய சேவையை வழங்குவதில்லை எனப் பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகம் தருவதில்லை எனவும், தமது தேவைகளிற்காக அலுவலகம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சுமார் 3 மாதமாகக் குறித்த கிராம சேவையாளர் அலுவலக கடமையை முறையாக மேற்கொள்வதில்லை எனவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை அலுவலக கடமை எனக் குறிப்பிடப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் 10 மணி வரை அவர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.
அலுவலகத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு காணப்பட்டதுடன், மக்கள் சேவைக்காக வெளியே காத்திருந்தனர். இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
குறித்த முறைப்பாட்டை அடுத்து பிரதேச செயலாளர் கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும் கிராம சேவையாளரின் கடமை நேரம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் முறைப்பாட்டை உறுதி செய்து கொண்டார்.
தொடர்ந்து பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில்,
பொதுமக்களால் குறிப்பிடப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அதற்கு அமைவாக இன்றைய தினம் அவர் கடமைக்காக அலுவலகத்திலிருந்திருக்கவில்லை. அவரை தொலைபேசி ஊடாக கேட்டபொழுது தான் வீட்டில் நிற்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் குறித்த முறைப்பாடானது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராம சேவையாளரை விசாரணைகளிற்காகப் பிரதேச செயலகத்திற்கு அழைத்துள்ளோம். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் தொற்று நோயியல் வைத்திய சாலை காணப்படும் அதேவேளை, அங்கு கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தொற்று பரவும் என்ற அச்சத்தினால் தான் வருகை தர முடியாது என அவரால் பொதுமக்களிற்குக் கூறப்பட்டுள்ளது.
தமக்கு உரிய சேவை கிராம சேவையாளரினால் வழங்கப்படுவதில்லை எனவும், சேவை
செய்யக்கூடிய கிராம சேவையாளர் ஒருவரை தமது பிரதேசத்திற்கு நியமித்துத் தருமாறும்
பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




