அரசியல் பாகுபாடின்றி அனைத்து சட்டவிரோத கட்டடங்களுக்கும் அகற்றப்படுமா..! பொதுமக்கள் கேள்வி
ஹட்டன் - டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நோர்வூட் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவியுமான கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டடங்கள் காரணமாக நீர் வழிந்தோடும் பாதைகள் தடைப்படுவதுடன், சிறிய மழைக்குக் கூட வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, நீர் வழிந்தோடுவதற்குத் தடையாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட நாலுபீலி பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பல வீடுகள் சேதம்
இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக வினவியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனினும், ஹட்டன் – டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள் காரணமாக கடந்த காலங்களில் மண்சரிவுகள் மற்றும் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக கடந்தகால நகரசபை ஆட்சியாளர்கள் முதல் தற்போதைய நிர்வாகம் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்துமூலம் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயரதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இருப்பினும், இந்த விடயத்தில் இதுவரை உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், நடைபாதைகள், பிரதான வீதிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் அனுமதியற்ற கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றம்
இந்நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையானது அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்குகளுக்கு அப்பால், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக, அரசியல் ரீதியாகத் தங்களுக்கு நெருக்கமானவர்களின் கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டு, எதிர்தரப்பினருக்கு சொந்தமான கட்டடங்கள் மாத்திரம் இலக்குவைக்கப்படக்கூடும் என்ற சந்தேகங்களையும் சிலர் வெளியிடுகின்றனர்.
எனவே, ஹட்டன் – டிக்கோயா நகரசபை எல்லைக்குள் உள்ள அனைத்து சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, எவ்வித அரசியல், தனிப்பட்ட பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
