பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள பெண் தெய்வம்
நாட்டிலிருந்து பிரித்தானியாவினால் எடுத்துச் செல்லப்பட்ட தாராதேவியின் சிலை உட்பட்ட தொன்மைப் பொருட்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wikramanayaka) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15.07.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இன்று நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். ஆனால், அதற்கு மேலதிகமாக இலங்கை மக்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பொறுப்பு எமது அமைச்சின் மீது உள்ளது.
காலனித்துவ காலம்
அதற்கமைய, எமது அமைச்சுக்கு சிறந்த சமூகத்தினை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் தேவையான கல்வி முறை நம் நாட்டில் உருவாக்கப்படவில்லை.
அந்தவகையில், காலனித்துவ காலத்தில் நம் நாட்டில் இருந்து பிரித்தானியாவிற்கு பல தொல்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் தாரா தேவி சிலையும் உள்ளது.
அதன்படி, அந்த சிலை உட்பட பல புராதன பொக்கிசங்களை நாட்டுக்கு கொண்டு வர தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
தாரா தேவி சிலை
அது மாத்திரமன்றி, நெதர்லாந்தில் இருந்தும் இதே போன்ற பல தொல்பொருட்கள் மீண்டும் எமக்குக் கிடைத்துள்ளன” என விளக்கியுள்ளார்.
தாரா தேவி சிலையானது, இலங்கையின் 7 - 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர் இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்த ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர் தனது பதவிக்காலம் முடிந்த நிலையில் குறித்த சிலையயை எடுத்து சென்றுள்ளார்.
தரமற்ற மருந்தினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |