நல்லூரில் உள்ள ராஜதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் (Vidura Wickramanayake), யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) எடுத்துரைத்துள்ளார்.
இன்று (06) காலை இடம்பெற்ற களவிஜயத்தின் போது, இவ்விடயங்கள் அவரால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன.
இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ். மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது.
அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என இதன்போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தொடர்பாக் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஆய்வுகூடத்தையும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பார்வையிட்டுள்ளார்.
இச் சந்திப்பின், போது தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜெயசிங்க (Nishanti Jayasinghe), இலங்கை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க (Anura Manatunga), யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் (K.Sudhakar), யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி கே.அருந்தவராஜா (K. Arundhavaraja)
வரலாற்றுத் துறை ஓய்வுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி ப.புஷ்பரட்ணம் (P. Pushparatnam), கலாநிதி கே.சிற்றம்பலம் (K.Chirambalam), கலாநிதி ச.சத்தியசீலன், கலாநிதி செ.கிருஷ்ணராஜா உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கே.சிவராம், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் நிறைவில் இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவினால் யாழ். பல்கலைக்கழக நூலகத்திற்கு நூல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
யாழ். மாவட்ட கலைஞர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் இடையிலான கலந்துரையாடல்
யாழ். மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண கலைஞர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக யாழ். மாவட்டத்தில் உள்ள கலைஞர்களுக்கான கலைஞர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போதய சூழ்நிலை காரணமாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு அரசின் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம் இனி அரசின் உதவித் திட்டங்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலைஞர்களால் இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது நேற்றையதினம் காரைநகரில் குழப்பம் ஒன்று இடம்பெற்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்ளி எழுப்பியிருந்தனர்.
குறித்த கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
நேற்றைய தினம் காரைநகரில் அமைச்சரை விரட்டியடித்த மக்கள் என பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது.
நான் நேற்றைய தினம் காரைநகருக்கு விஜயம் செய்த போது அங்கே கூறியிருக்கின்றார்கள் அமைச்சர் ஒருவர் வருகிறார் இங்கே விகாரை கட்டுவதற்காக என்று ஏன் அவ்வாறு பொய் கூறுகின்றார்கள். இவ்வாறு மீண்டும் மதவாதம் இனவாதத்தை தூண்டி சாதாரண மக்களை மீண்டும் பிரச்சினைக்குள்ளாக்க நினைக்கின்றார்கள்.
நேற்றைய சம்பவத்திற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் உணருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
