மதச்சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ரணிலுக்கு சந்திரிக்கா வலியுறுத்தல்(Video)
இலங்கையின் மதச்சுதந்திரத்தை பாதிப்பிற்குள்ளாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அண்மை நாட்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையிலேயே, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அண்மையில் நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டிருந்தார்.
நதாஷாவை கைது செய்த தற்போதைய இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் சைவ மதங்களை அவமதித்த, ஆலயங்களை எரித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையும் கைது செய்ய வேண்டும்.
ஏனைய மதங்களுக்கு மரியாதை
நதாஷாவை விட கொடுரமான முறையில் இலங்கையில் உள்ள ஏனைய மதங்களை அவமதித்த ஞானசார தேரர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பௌத்த மதத்தை மதிக்க வேண்டுமென்பது உண்மையாக இருந்தாலும் அதே மரியாதை ஏனைய மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், இலங்கை பிரஜைகளுக்கு தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற முழு உரிமையும் உண்டு வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்கனை முன்வைத்து அவருக்கு அவப்பெயர் வரவழைத்த தரப்பினருக்கு எதிராகவும் இலங்கை ஜனாதிபதி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் மதங்களை அவமதித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தை இலங்கையில் நிலைநாட்ட முடியும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.




